Tuesday, 10 March 2015

சுழற்சி

“நீங்க ஆயிரம் சொல்லுங்க. நான் வரமாட்டேன்னா வரமாட்டேன். அவ்ளோ தான்.”

“ஐயோ. சொன்னா புரிஞ்சுக்கோ மா. அவ ஒன்னும் வேணும்னே அப்படிப் பண்ணல. ஏதோ தெரியாம நடந்துடுச்சு. மன்னிச்சு விட்டுடேன்?”

“அது எப்படிங்க மன்னிக்க முடியும்? அத்தன பேர் முன்னாடி என்ன அவமானப் படுத்தினாளே! அவ போதாதுன்னு அந்த வாலு, அவளோட பொண்ணும், சேர்ந்துட்டாளே அன்னிக்கு என்னை அசிங்கப்படுத்த.”

“ஏம்மா. எவ்ளோ படிச்சிருக்க. எவ்ளோ பெரிய பதவில இருக்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணேன். அவ யாரு? என் தங்கச்சி. அவ வீட்டு விசேஷத்துக்கு நாம குடும்பத்தோட போகலன்னா நல்லா இருக்குமா? நீயே சொல்லு.”

“இதோ பாருங்க. என்னால அந்த சம்பவத்த மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அதான் நீங்களும் பசங்களும் போறீங்களே. நான் வரலன்னா ஒன்னும் கொறைஞ்சிடாது. நீங்க போயிட்டு வாங்க. போங்க. ஏய் மாதுரி! ரெடி ஆகிட்டியா? உங்கப்பா ரெடி. உன் அண்ணன் வழில இருக்கறதா சொன்னான். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான்.”

“ஹ்ம்ம். நான் சொன்னா நீ எங்க கேட்கப் போற,” என்று பெருமூச்சு விட்டு அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றார் மல்லிகார்ஜுன்.

திருமதி. பூங்கொடி மல்லிகார்ஜுன். ஆம். அது தான் நம் கதாநாயகியின் பெயர். திருமணமாவதற்கு முன்பு பூங்கொடி ராஜேந்திரனாக இருந்தவர், தன்னுடன் கல்லூரியில் படித்த மல்லிகார்ஜுனைக் காதலித்து மணந்த பின்பு இப்படிப் பெயரை மாற்றியிருந்தார்.

இத்தனைக்கும் பூங்கொடிக்கும் மல்லிகார்ஜுனின் தங்கை பார்வதிக்குமிடையே பெரிய சண்டைகளோ மனக்கசப்புகளோ இல்லை. தமிழ்-தெலுங்கு என்ற கலப்புத் திருமணமாக இருந்தாலும் இருவரது குடும்பத்திலும் இருவரையும் உடனே ஏற்றுக் கொண்டிருந்தனர். இதெல்லாம் நடந்து 18 வருடங்களும் கடந்துவிட்டன.

ஏதோ ஒரு நாள் பார்வதி தெரியாத்தனமாக செய்துவிட்ட ஒரு காரியம் பூங்கொடியை பயங்கரமாக பாதித்திருந்தது. அதுவும் அந்த காரியம் தனது சொந்த வீட்டின் புதுமனைப் புகுவிழாவின்போது நடந்ததே என்ற வருத்தமும், கோபமும் பூங்கொடியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அன்று பார்வதியைப் பார்த்துச் சொன்ன “Actions speak louder than words,” என்ற வாக்கியமே பூங்கொடி கடைசியாக அவளிடம் பேசிய வார்த்தைகளாகும். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பின்னும் பூங்கொடியின் சினம் அடங்கியபாடில்லை.

எவ்வளவோ பேசி சமாதானப்படுத்த முயற்சித்த பின்னும் மல்லிகார்ஜுனுக்கு மிஞ்சியதென்னவோ தோல்வியே. பார்வதி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருந்தாள். ஆனால் பூங்கொடி மசிவதாகத் தெரியவில்லை.
______________________________

தான் முதன்மை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் வணிக இதழில் பூங்கொடிக்கு எக்கச்சக்க மரியாதை. அந்த இதழின் எழுத்துத் தரம் எவ்வளவு நேர்த்தியாக இருந்ததோ அதற்கு இருமடங்கு சிறப்பானதாக இருந்த அம்சம் அதில் இடம்பெற்றிருந்த ஓவியங்களாகும். வருடாவருடம் சிறந்த வணிகவிதழ் பட்டத்தை அவ்விதழ் பெற்றதில் பூங்கொடிக்கும் பெரும்பங்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் அவ்விதழின் இணையதளமும் பல புதுவிதமான வடிவமைப்புகளால் நிறைந்து காலத்திற்கேற்ப தன்னைத்தானே புதுமைப்படுத்திக்கொண்டிருந்தது. உபயம்: பூங்கொடியின் அபிரிமிதமான ஆற்றலும், 20 வருட அனுபவமும்.

பொது வாழ்க்கையில் எது எப்படியிருந்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட அவமானம் அவமானமே. அதில் மாற்றுக்கருத்தே இல்லாமலிருந்தார் பூங்கொடி.
______________________________

மல்லிகார்ஜுன் மகிழ்வுந்தில் எல்லா உபகரணங்களும் சரியாக இருக்கின்றனவா என்று சோதிக்கச் சென்றிருந்த நேரத்தில் அவருடைய மகன் பவன் வீட்டிற்கு வந்துவிட்டான் -- தனது தாயிடம் சொன்னது போலவே ஐந்து நிமிடங்களுக்குள்.

உள்ளே வந்தவன் வந்த வேகத்தில் தனது கையிலிருந்த பிளாஸ்டிக் பையை அப்படியே மேஜை மீது எறிந்துவிட்டு கடகடவென தனது அறைக்குள் சென்றான் உடை மாற்றிக்கொள்ள.

“அடேய்! கொஞ்சமாவது பொறுப்பிருக்கா! இப்படியா ஒரு பொருள தூக்கிப் போடுவ? அது உன்னுதே இருந்தாலும் என்ன? ஒழுங்கா வெச்சிக்கோயேன்!” என்று கத்தினார் பூங்கொடி.

“சரி மா. சரி மா. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. அதுக்கு ஒன்னும் ஆகாது,” என்ற குரல் மட்டும் கேட்டது.

இன்னும் ஐந்து நிமிடங்களான பின் மல்லிகார்ஜுன், பவன், மாதுரி மூவரும் கிளம்பத் தயாராகியிருந்த நிலையில் மல்லிகார்ஜுன், “இது தான் உன் கடைசி முடிவா? இப்போவும் ஒன்னும் பிரச்சனையில்ல. நீ ரெடி ஆகரன்னா சொல்லு. நாங்க மூணு பேரும் காத்துட்டு இருக்கோம். நீ போய் தயாராகிட்டு வா. எல்லாரும் ஒன்னா போலாம்,” என்றார்.

பூங்கொடி சட்டென அவரை நோக்கித் தனது கண்களாலேயே துளைப்பது போல் பார்த்தார்.

“சரி, சரி. அப்படியே இருக்கட்டும். நாங்க கெளம்பறோம். நீ பார்த்துக்கோ. பத்தரை மணிக்குள்ள வந்துடறோம்,” என்றார் மல்லி.

பூங்கொடி பவனுக்கும், மாதுரிக்கும் நெற்றியில் முத்தமிட்டு, “கொழந்தைகளா, நல்லா சாப்பிட்டு வாங்க டா. அந்த வாலு கூட சண்டை எதுவும் போடாதீங்க. அவ கொஞ்சம் அப்பாவி தான்,” என்று கூறி வழியனுப்பினார்.

“நாகோ முத்து? (naaku o muddhu)” என்று கெஞ்சியபடி நின்ற மல்லிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

“கெளம்புங்க, கெளம்புங்க, காத்து வரட்டும்,” என்று செல்லமாகக் கடிந்துகொண்டார் பூங்கொடி.
______________________________

மகிழ்வுந்து கிளம்பியது.

ஒரு பத்து நிமிட பயணத்திற்குப் பின்பு.

“அப்பா, ஏம்ப்பா அம்மா பார்வதி அத்தை வீட்டுக்கு வரமாட்டேங்கிறாங்க? போன வருஷம்லாம் வந்தாங்களே. இப்போ என்னாச்சு? இன்னிக்கு நீங்க சொல்லியே ஆகணும்,” இது மாதுரி.

“ஹ்ம்ம்ம். உன்கிட்ட இனிமேல் உண்மைய மறைச்சு எந்த பிரயோஜனமுமில்ல. உன் அண்ணன் சொல்லுவான் பாரு. ஒரேய் நா பங்காரு கொடகா, ஆ ரோஜு ஏம் ஜெரிகிந்தோ செப்பு ரா.” இது மல்லி.

“அதேன்டன்டே.... நம்ம ஐயப்பன்தாங்கல் வீட்டு கிருஹப்ரவேசம் நடந்துதில்ல போன வருஷம். உனக்கு கூட சரியா அப்போ guides camp இருந்ததால நீ வர முடியாம போச்சே. அன்னிக்கு அம்மாவும், அப்பாவும் கீழ உட்கார்ந்து ஹோமம் பண்ணிட்டு இருந்தாங்க. பூஜைல்லாம் முடிஞ்சு அப்பா எழுந்து போயிட்டாரு. அம்மா வீல் சேர்ல ஏறினாங்க. அப்போ ஏதோ லைட்டா இரண்டு தடவை ஸ்லிப்பாகி அம்மா ஏற முடியாம போச்சு. அத பார்த்துட்டு இருந்த பார்வதி அத்தை உதவி பண்றேன்னு ஓடி வந்துட்டாங்க. அத்தைய பார்த்துட்டு நிரஞ்சனாவும் வந்துட்டா. அம்மாவுக்கு வந்துது பாரு கோவம். அப்படியே ரெண்டு பேரையும் முழுங்கிடுற மாதிரி ஒரு ரெண்டு நிமிஷம் மொறைச்சாங்க. நாங்க எல்லாருமே பயந்துட்டோம்னா பார்த்துக்கோயேன்.” இது பவன்.

“கரெக்ட். இதே மா ஆ ரோஜு ஜெரிகிந்தி. அன்னிக்கு பேசறத நிறுத்தினது தான், இன்னமும் தன்னோட முடிவ மாத்திக்கல,” என்றார் மல்லி.

“ஓ...... ஓகே, ஓகே. நல்ல வேணும் அத்தைக்கு. இத்தன வருஷமாகியும் அம்மாவ சரியா புரிஞ்சுக்காம இருந்துட்டாங்களே,” என்றாள் மாதுரி. வயது 13 தான் என்றாலும் கொஞ்சம் ஆழமாக யோசிக்கக் கூடியவள் அவள். பிஞ்சிலேயே பழுத்தது.
______________________________

மல்லியும் பிள்ளைகளும் கிளம்பிவிட்ட பின் மேஜை மீது பவன் எறிந்திருந்த பிளாஸ்டிக் பையைப் பூங்கொடி  பிரித்து உள்ளே இருந்த குறுந்தகடை எடுத்தார். பிறகு தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியை நோக்கிச் சென்றார்.

தொலைக்காட்சியினருகே இருந்த PlayStation 3-இல் அந்த குறுந்தகட்டினை நுழைத்து, “ஹப்பாடா! இன்னைக்காவது இந்த game-அ வாங்கிட்டு வந்தானே இந்த பையன். எவ்ளோ நாள் வெயிட் பண்ண வேண்டி இருந்துது!” என்றார்.

தொலைக்காட்சியில் “Far Cry 4 என்ற பெயர் தோன்றிற்று. கையில் PS3 controller இருந்தாலே குழந்தையாக மாறிவிடுவார் பூங்கொடி.
______________________________

“அதெல்லாம் சரிப்பா. ஆனா அப்போ Actions speak louder than words-னு அம்மா சொன்னாங்களே. அதுக்கு என்ன பா அர்த்தம்? எனக்கு இன்னமும் கூட அம்மா ஏன் அத சொன்னாங்கன்னு புரியல,” என்றான் பவன். வயது 17 என்றாலும் மேலோட்டமாகத் தான் யோசிக்கக் கூடியவன் இவன். வெறும் பழம்.

“ஹாஹாஹா. அதான் டா உங்கம்மா வெச்ச punch-u. உனக்கே ஒரு நாள் புரியும்,” என்றார் மல்லி.

அதற்குள் பார்வதியின் வீடு வந்திருந்தது.

No comments: