Monday, 20 May 2013

வாழ்க வளமுடன்டங்! டங்! டங்

"அண்ணா!" என்று யாரோ உரக்கக் கத்தியதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் கேத்தரின். இரும்புத் தாழ்ப்பாளை அதே இரும்பைக் கொண்டு செய்யப்பட்ட கேட்டுடன் சேர்த்து அடித்ததன் விளைவு தான் அந்த "டங்! டங்!"

வெடுக்கென்று எழுந்து சமையலறையில் ஒரு ஓரத்தில் பாவமாய் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியினை எடுத்து வெளியே வந்தாள்.  

கேத்தரின் ஒரு மிகவும் தனித்தன்மை வாய்ந்த பெண். பொதுவாக தத்துவார்த்தமாக சிந்திப்பவர்கள் மதத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும் Nietzsche, Osho போன்றவர்களின் எழுத்தை அதீதமான சிரத்தையுடன் படித்த பின்பும் கடவுள் நம்பிக்கையோடு இருப்பதென்பது முடியாத காரியமே. ஆனால் கேத்தரின் ஒரு விளக்கமுடியாத விதிவிலக்கு

Nietzsche-வின் "God is dead " என்ற சொற்களைப் படித்த அதே உதடுகள் தான் "Our father in heaven" என்ற கிறித்துவ பிரார்த்தனையையும் தினமும் சொல்லக் கூடியவை.

"The existence and non-existence of God depends on your definition of the term," என்று எங்கோ படித்ததை அவ்வப்போது நினைவு கூர்ந்துகொண்டிருப்பாள். 

இவ்வாறாக "விளங்கமுடியா கவிதை"யாகத் திகழ்ந்த கேத்தரினுக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றிற்று. "பிறர் பாவங்களுக்காக தன்னையே வருத்திக் கொண்டவர் இயேசு கிறிஸ்து. வீடு சுத்தமாக இருக்க பலர் போடும் பல விதமான குப்பைகளை தன்னுள் அடக்கிக்கொள்ளக் கூடியது குப்பை தொட்டி. அப்படியென்றால் குப்பைத்தொட்டியும் ஒரு விதத்தில் கிறிஸ்து போன்றது தானோ? அதை ஏன் நாம் இழிவாகப் பார்க்கிறோம்?" என்று நினைத்துக் கொண்டாள்.

இதைத் தன் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்ள மாட்டார்கள். "கண்ட கண்ட புக்ஸ் படிச்சு தான் உனக்கு இந்த மாதிரி கீழ்த்தனமா யோசிக்கத் தோணுது. இரு, ஒரு நாள் அந்த புக்ஸையெல்லாம் கிழிச்சு குப்பை தொட்டில போட்டுடறேன். அப்போ தான் உனக்கு புத்தி வரும்." என்று அம்மா கூறுவதைக் கற்பனை செய்து கொண்டு, இது போன்ற கருத்துகளைப் பகிர ட்விட்டர் தான் சரியான இடம் என்று தனது "mind voice" சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் கேட்டது அந்த "டங்! டங்!"

திடீரென்று சுயநினைவுக்கு வந்தவள் போல் கேத்தரின் தெளிவாகி குப்பை அள்ள வருபவரிடம் அந்த பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியினை ஒப்படைத்தாள். சரியாக அதே நேரத்தில் தான் முன்னதாகக் குறிப்பிடப்பட்ட "அண்ணா"வும் மாடியிலிருந்து கீழே வந்தார்.

"அண்ணா" என்பது அந்த வீட்டின் உரிமையாளர். தான் பிறந்து வளர்ந்த சேலத்திலேயே கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தாள் கேத்தரின். பெங்களூருக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால் PG-க்களில் தங்குவதை நிறுத்தி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள் அவளும் அவளது சக ஊழியை மற்றும் தோழியுமான கரீஷ்மா சட்டர்ஜி. பெயரைப் பார்த்தே யூகித்திருப்பீர்கள் கரீஷ்மா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவள் என்று. இருவரும் தமது குடும்பத்தை விடுத்து, சொந்த ஊரை விடுத்து வேறொரு ஊரில் தங்கியிருந்ததால் வாழ்க்கையில் பற்பல விஷயங்களை கற்றுக் கொண்டார்கள்.

ஒரே அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரிந்துக் கொண்டிருந்த அவர்கள் ஒரே வீட்டில் வாழவும் முடிவு செய்து ஜெயா நகரில் ஒரு "2BHK" வீட்டினை வாடகைக்கு எடுத்தனர்.

அவ்வீட்டின் உரிமையாளர் 'அண்ணா' தன் வீட்டுக் குப்பையை எடுத்து வெளியே வந்தார். வந்தவரைப் பார்த்து கேத்தரின் "குட் மார்னிங், சார்!" என்று கூறிப் புன்னகைத்தாள். அவரும் பதிலுக்கு காலை வணக்கங்கள் தெரிவித்து புன்னகைத்து விட்டுச் சென்றார்

உள்ளே வந்த கேத்தரின் அரை மணி நேரத்தில் தயாராகி முடிக்கையில் மணி 8.20 ஆகி இருந்தது. இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த தனது தோழியிடம், "கரீஷ்மா, இட்ஸ் ஆல்ரெடி எய்ட் ட்வென்டி," என்று கூறினாள். ஒரு அரை நிமிடம் அப்படி இப்படிப் புரண்டு கடைசியில் எழுந்த கரீஷ்மா அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகத் தன் பங்கிற்கு ஒரு அரை மணி நேரம் எடுத்துக் கொண்டாள்.

ஒருவாராக இருவரும் ஒன்பது மணிக்கு சரியாக வீட்டைப் பூட்டிக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டனர்

வாழ்க்கையில் எப்பொழுதும் "ஃப்ரீ பர்ட்"-ஆக இருக்க வேண்டும் என்ற ஆசை கரீஷ்மாவுக்கு அதிகம். அதற்கு மாறாக தத்துவம் கித்துவம் என்றெல்லாம் யோசிக்கும் கேத்தரினுக்கோ வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானதாகத் தெரிந்தது. தமது சிந்தனைகளில் இப்படிப்பட்ட அடிப்படைக் கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் மிகுந்த ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவர்கள்

என்ன, கரீஷ்மா எப்போதும் தனது "Scooty Pep"- மின்னல் வேகத்தில் செலுத்தக் கூடியவளாதலால் சற்றே பயப்படக் கூடிய கேத்தரின் "Hail Mary" என்ற இன்னொரு பிரார்த்தனையையும் தினமும் கூறுவதைப் பழக்கமாக்கிக்கொண்டு விட்டாள்

வண்டியில் அலுவலகத்திற்குச் செல்லுகையில், கேத்தரின் ஏதோ ஒன்றை மிகவும் சிரத்தையாக முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கரீஷ்மாவும் சில முறை வண்டியின் பின் காட்டிக் கண்ணாடியில் (rear view mirror) பார்த்திருக்கிறாள். அதை கவனித்து மெலிதாகப் புன்னகைத்து இடது வலதாக தலையை ஒரு முறை அசைத்து விட்டு சென்று கொண்டேயிருப்பாள்

இத்தனைக்கும் கரீஷ்மாவின் வண்டியோட்டும் பாணியைப் பற்றி அவளிடம் கூறாமல் இல்லை கேத்தரின். "யூ ஆர் ரியலி குட் ரைடர். பட் வெரி ஓவர் கான்ஃபிடண்ட் அட் சேம் டைம்," என்று ஒரு நாள் வெளிப்படையாகவே கூறிவிட்டாள். அவள் பதிலுக்கு, "இட்ஸ் ஆல்ரைட் யா. டோன்ட் பீ ஸோ ஸ்கேர்ட். நோ டு கன்ட்ரோல் மை ஸ்கூட்டர். சில்," என்றாள். சரி, இவ்வளவு நம்பிக்கையுடன் கூறுகிறாளேயென்று கேத்தரினும் அதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை அன்றிலிருந்து

ஆனால் சோதனை என்பது வரும் முன் கடிதம் மூலம் தெரிவித்து விட்டா வரும்? அது சூப்பர் ஸ்டாரைப் போன்றது. எப்பொழுது வரும்? எப்படி வரும்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்து ஒரு சூறாவளியையே கிளப்பி விட்டுச் சென்றுவிடும்

அன்று அவ்வாறு தான்

கோரமங்களாவில் இருக்கும் அலுவலகத்திற்கு டெய்ரி சர்க்கில் வழியாகச் செல்வார்கள் இருவரும். டெய்ரி சர்க்கில் பாலத்தை இதுவரை யாரும் மெதுவாகக் கடந்ததாக சரித்திரமே கிடையாது. வெளியூர் பேருந்தாக இருந்தாலும் சரி, தனி நபரின் வாகனமாக இருந்தாலும் சரி, அந்த பாலத்தை 70கி.மீ வேகத்தில் தான் கடக்கும். கரீஷ்மா மட்டும் விதிவிலக்கா என்ன?

பொதுவாக வேகமாகச் சென்றாலும் பாலத்தை இறங்குகையில் சற்று சீர்படுத்திக் கொள்ளக்கூடியவள் கரீஷ்மா. எப்பொழுதும் வண்டியை ஓட்டக் கூடிய விதத்தில் அன்று ஓட்டினாலும், பாலம் முடியுமிடத்தில் முன்னமிரவு பெய்த மழையால் உண்டான ஓட்டையை அடைக்கும் பணி நடந்து அங்கே ஒரு பெரிய பாறையை வைத்திருப்பதைக் கடைசி நொடியில் தான் கவனித்தாள்

என்ன 'sudden brake' அடித்தும் எந்த பயனும் இல்லை. அந்த பாறையில் வண்டி வேகமாக மோதி இருவரும் ஒரு பத்தடி பறந்து விழுந்தனர்.

தலைக்கவசம் அணிந்திருந்ததால் கரீஷ்மாவுக்குக் காயம் அதிகமாக ஏற்படவில்லை. துரதிர்ஷ்டம் என்பது பெரும்பாலும் 'பில்லியன் ரைடரைத்' தான் தாக்கக் கூடியது.

கரீஷ்மாவையும் தாண்டி பறந்து விழுந்த கேத்தரின் வலதுபுறத்தில் இருந்த சாலை மீடியனில் தலை வேகமாக மோத, அதிக அளவில் இரத்தம் இழக்க ஆரம்பித்தாள். அவர்களுக்குப் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் அப்படியே நின்று போக, டெய்ரி சர்க்கில் பாலத்திலிருந்து நிம்ஹான்ஸ் மருத்துவமனை வரை போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. பாறையுடன் மோதிய வண்டியோ பெரிய அளவு அடி ஏதும் வாங்காமல் சாலையின் இடது புறத்தில் படுத்துக்கிடந்தது. பெருமளவு சேதம் அடையாமல் இருக்குமளவிற்கு ஒரு இயந்தரத்தைப் படைக்கும் ஆற்றலை மனிதனுக்கு அளித்த இயற்கை அன்னை, அதே அளவு வலிமையை அம்மனிதனுக்கு அளிக்காமல் இருப்பதே ஒரு விந்தையான விஷயம் தான்.

இதைப் பற்றி எல்லாம் அறியாத, அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத கரீஷ்மா மெதுவாக தனது உடல் வலிமையை ஒருங்கிணைத்துத் தனது தமிழ்தோழியை நோக்கித் தவழ்ந்து வந்தாள். சுயநினைவை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்த கேத்தரின் கரீஷ்மாவின் மங்கலான உருவை மட்டும் கண்டாள். அவளைக் கண்டதும் கேத்தரின் வலியுடன் கலந்த ஒரு மெல்லிய புன்னகையை அளித்தாள். அந்த புன்னகை "நான் அப்போவே சொன்னேன் இல்ல?" என்று கேட்பது போல் இருந்தது

கரீஷ்மா ''வென்று சத்தமாக அழ ஆரம்பித்த அதே நேரத்தில் சுற்றியிருந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்சை அழைத்தார், மற்றொருவர் அடிப்படை முதலுதவி செய்யத் தொடங்கினார்

கீழே வலியில் துடித்து நகர முடியாமல் படுத்துக் கொண்டிருந்த கேத்தரின் வலதுபுறத்திலிருந்த ஒரு வண்டியின் மேல் இருந்த வாசகத்தைக் கண்டாள்

"வாழ்க வளமுடன்."

அவள் கண்கள் மூடிக் கொண்டன.