Tuesday 4 September 2012

கலை செய்த உதவி


அப்பொழுது வருடம் 2003. நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் வயதை ஒத்தவர்களுக்கும், என்னை விட வயதில் பெரியவர்களுக்கும் இந்த "தக்ஷின் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா" என்பது கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அவர்கள் நடத்தும் 8 தேர்வுகளை முடித்தாலே போதும்; "ஹிந்தி பண்டிட்" ஆகிவிடலாம். அது மட்டுமல்லாமல், தேர்வு நடைபெறும் அறைகளுக்குள் நூலுரையை எடுத்து வரலாம். அருகில் இருப்பவரைப் பார்த்து "காப்பி" அடிக்கலாம். சுருக்கமாக, இப்படிப்பட்ட பல நாதாரித்தனங்களை அறையில் இருக்கும் தேர்வு அதிகாரியின் உதவியுடனேயே அரங்கேற்றலாம். எனக்கு இப்பொழுதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த 8 தேர்வுகளில்  3-ஆவதான "ராஷ்ட்ரபாஷா" எழுதும்போது, எனக்கு அருகில் அமர்ந்திருந்த சகமாணவி ஒருத்தி தனது உடையிலிருந்து எங்கிருந்தோ ஒரு பாதி நூலுரையை எடுத்து மேஜை மீது வைத்து அதைப் பார்த்து எழுத ஆரம்பித்தாள். இப்படி மக்களுக்கு பல குறுக்கு வழிகள் இருப்பதால் அந்த இயக்கம் இன்றும் வலுவாக ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

அந்த காலகட்டத்தில் நான் ஒரு 'ஆனஸ்ட்'  ராஜ்-ஆக இருந்ததும். அதன் காரணமாக மேலே குறிப்பிட்டுள்ள நாதாரித்தனங்கள் எதிலும் ஈடுபடாமல் இருந்ததும். அதன் காரணமாக நான் எழுதிய 5 தேர்வுகளில்  4- இல் "செகண்ட் கிளாஸ்"-இல் (அதுவும் 40, 50 மதிப்பெண்கள் தாண்டாமல்) தேர்ச்சி பெற்றதும் வேறு கதை. 

நான் இங்கே கூற இருப்பது அந்த ஹிந்தி தேர்வுகளுக்கு நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் நான் சந்தித்த நபர், மற்றும் அவருடன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மறைமுகமான உறவைப் பற்றியதாகும். 

அந்த ஹிந்தி ட்யூஷன் நடத்திக் கொண்டிருந்த வயதான பெண்மணியின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. 'கமலா'-வாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கதை கூறும் சௌகரியத்துக்காக அவ்வாறே வைத்துக் கொள்வோம். அவருடைய முதன்மையான மாணவியாகத் திகழ்ந்தவரின் பெயர் கலையரசி. அவரை நாங்கள் அனைவரும் "கலை அக்கா, கலை அக்கா" என்று அழைப்போம். சில பேர், அவரை கடுப்பேற்றுவதற்காகவே "கலையரிசி" என்றும் அழைத்து வந்தனர். நானும் ஓரிரு முறை அவ்வாறு அழைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

கலை அக்கா மிகவும் நல்லவர். பாடத்தில் எங்களுக்கு எந்த வித சந்தேகம் இருந்தாலும் அவர் தீர்த்து வைப்பார். கமலா டீச்சர் வீட்டில் இல்லாத பொழுதோ, ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போதோ மாணவர்களுக்கு பாடங்களை சென்றடையச் செய்வது கலை அக்காவின் பொறுப்பேயாகும். அவர் பாடம் எடுக்காத நேரங்களில் சினிமா பற்றி பேசுவார். ரேடியோ கேட்பதும் அவருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். சூரியன் FM-இல் முந்தைய நாள் என்ன சொன்னார்கள், "ஹலோ சென்னை"யில் சுசித்ரா எதைப் பற்றி பேசினார் என்று எல்லாமே அவருக்கு அத்துப்படி. மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருப்பார் அவற்றைப் பற்றி.

அந்த வருடம் தான் "காக்க காக்க" திரைப்படம் வெளியாகி, திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரேடியோ-வைப் பற்றி கேட்கவே வேண்டாம். மணிக்கொரு முறை அந்த படத்தின் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இருந்தனர். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. "உயிரின் உயிரே" பாடலின் தொடக்கத்தில் வரும் "omahazeeya waahiyaara" பகுதி காதலைப் பற்றிய ஏதோ ஜப்பானிய கவிதை என்று ரேடியோ-வில் கேட்டதை அவர் எங்களிடம் ஒரு நாள் கூறினார். நாங்களும் அதை நம்பிவிட்டோம். அப்பொழுது ஹாரிஸ் ஜெயராஜ் திரைத்துறைக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களே ஆகியிருந்ததால் அவருடைய பாடல்கள் அனைவரையும் கவரும் விதமாக இருந்தன. நானே அப்பொழுது ஹாரிஸ் அமைத்த இசையின் பிரியனாக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தானே தெரிகிறது அவர் ஒரு அரைத்த மாவையே அயராமல் அரைக்கும் கிரைண்டர் என்று. சரி, அவரைப் பற்றிய பேச்சு ஒருபுறம் இருக்கட்டும். அது ஒரு சொல்லி மாளாத சோகக் கதை.

இப்படி, ஹாரிஸ் ஜெயராஜ் பாடலில் பொருளே இல்லாத உளறலைக் கவிதை என்று எண்ணும் அளவுக்கு சூது வாது தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருந்தார் கலை அக்கா. அவர் நிஜமாகவே மிகவும் நல்ல பெண். அதை மறுக்கவே முடியாது. 

இப்படித்தான் ட்யூஷன் எல்லாம் முடிந்து தேர்வு நாளன்று மாணவர்கள் அனைவரையும் கலை அக்கா தன்னோடு அழைத்துச் செல்வார். அவரும் அப்பொழுது கடைசி இரண்டு தேர்வுகளுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததால், அவரும் எங்களுடன் சேர்ந்து தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் மத்தியில் நாங்கள் தேர்வு முடித்து வந்ததும் எங்களிடம் அக்கறையாகக் கேட்பார் தேர்வை எப்படி எழுதினோம் என்று. 

ஒரு முறை, தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்ப போதுமான அளவு காசு இல்லாததால் அவரிடம் ஒரு இருபது ரூபாய் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது பசியாகவும் இருந்ததால் ஒரு பத்து ரூபாய் கூடுதலாகி முப்பது ரூபாய் கடன் வாங்கி விட்டேன். அதன் பிறகு பள்ளித் தேர்வுகள் வந்ததால் இந்த ஹிந்தி ட்யூஷன் நின்றுவிட்டது. ஆனால் அவர் தனது வீட்டுக்கு வரும் வழியை தெளிவாக என்னிடம் கூறினார். "போரூர் வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்த தாண்டி ரைட்ல ஒரு சந்து வரும். அதுல நேரா வந்தா செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல் இருக்கு. அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்தேன்னா பச்ச கலர் கேட் வெச்சு ஒரு வீடு இருக்கும். அது தான். மறக்காம வந்து குடுத்துடு." அவர் கூறிய வார்த்தைகள் என் காதில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. 

நானும் பிறகு கொடுக்கலாம், பிறகு கொடுக்கலாம் என்றெண்ணி காலத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். 

அடுத்த ஹிந்தி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கும் நேரமும் வந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக கமலா டீச்சரின் கணவர் இறந்துவிட்டார். இப்படியிருந்த நிலையில் அவரது வீடும் சில கயவர்களால் சூறையாடப்பட்டு விட்டது. இப்படி சங்கடத்தின் மேல் சங்கடம் வந்து வாட்டியதில் கமலா டீச்சர் என்ன செய்வதென்றே புரியாமல் ட்யூஷனை நிறுத்தி விட்டார். நானும் சற்று கனத்த இதயத்தோடு வேறொரு ஆசிரியரிடம் பயிற்சி பெறச் சென்றேன். 

இதற்கிடையில், நான் கலை அக்காவிடம் வாங்கிய கடனை சுத்தமாக மறந்தே பொய் விட்டேன். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி விட்டன. அதுவும் ஒன்பது வருடங்கள்!

எனக்குப் பொதுவாகவே காசு கடன் வாங்குவது பிடிக்காது. என் அம்மா எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்பார், "யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. அப்படியே வாங்கினாலும் அதை சரியான நேரத்தில் திருப்பியளித்துவிட வேண்டும்". என் தாயாரின் இந்த கொள்கை எனக்கும் என் அக்காவுக்கும் அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டது. கடன் வாங்கினால் அதைத் திருப்பி தரும் வரை மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். 

நான் சுயமாக சம்பாதிக்க தொடங்கிய பின்னர் சில முறை சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தினால் கடன் வாங்கி இருக்கிறேன். அவற்றை சரியான நேரத்தில் திருப்பியும் கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள் என்னிடம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். "அப்புறம் தரேன், அப்புறம் தரேன்" என்று கூறி ஒரு முழு வருடம் ஆகியும் திருப்பிக் கொடுக்காமலும் இருக்கின்றனர். எல்லாவற்றையும் பொறுத்துப் போக வேண்டுமல்லவா?

இத்தனை வருடங்கள் ஆன பின்பும், இன்றும் கலை அக்காவிடம் வாங்கிய காசை நான் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்பொழுது நான் அந்த "பச்ச கேட்"-ஐத் தேடி சென்றாலும் நான் வாங்கிய காசை திருப்பி தர முடியுமா என்று தெரியாது. கலை அக்காவுக்கு கண்டிப்பாக திருமணமாகியிருக்கும். அவர் தாய்-தந்தை இன்னும் அதே வீட்டில் தான் இருக்கின்றனர் என்பதற்கு உத்தரவாதமும் கிடையாது. 

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அப்படிப் பட்டவை. நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் யாரவது ஒருவருக்குக் கடன் பட்டுள்ளோம். சில சமயங்களில் பல பேருக்கு பல விதங்களில் கடன் பட்டுள்ளோம். நாம் பெற்ற கடன் அனைத்தையும் கண்டிப்பாக தீர்த்து விடுவோமா என்பது சந்தேகமே. ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம். அவர்கள் செய்த கடனை மறக்காமல் என்றும் நன்றியுணர்வோடு இருக்கலாம். சில சமயங்களில் நம்மால் முடிந்தது அவ்வளவே.

No comments: