Tuesday, 12 June 2012

தோள்கள்


ஸ்வப்னாவும், அஞ்சலியும் பீச்சில் விளையாடி முடித்துவிட்டு, தங்கள் ஈரமான கால்களில் கொஞ்சம் மணல் ஒட்டியிருக்க, ஒட்டாத மணல் நான்கு திசைகளிலும் பறக்க ஓடி வந்தனர். அவர்களது தந்தை ரகு கைகளில் அவ்விருவரின் காலணிகளையும் தூக்கிக்கொண்டு மெதுவாகப் பின்தொடர்ந்தான். 

"இன்னும் எத்தன நேரம் பா இங்க இக்க போறோம்?" என்று கேட்டாள் அஞ்சலி தன் அழகிய மழலைக் குரலில். மணி ஆறரை ஆகியிருந்தது. அவர்கள் வந்ததோ நான்கு மணிக்கு. மாலை சூரியனின் அஸ்தமிக்கும் ஒளியில் தொலை தூரத்தில் இருந்த ஓரிரு கப்பல்கள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தன. இன்னும் சில நேரத்தில் அக்கப்பல்களும் மறைந்து, அவற்றிலிருந்து வரும் வெளிச்சம் மட்டும் தான் தெரியும்.  

ரகு அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை செய்து, "இதோ கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்டலாம் டா செல்லம். அக்காவுக்கு பசிக்குதாம்" என்று கூறி ஸ்வப்னாவைப் பார்த்தான். ஸ்வப்னாவும் அப்பாவைப் பார்த்து புன்னகைத்தாள். மூத்தவள் ஸ்வப்னாவுக்கு வயது 5. இளையவளுக்கோ வயது 3.

சுனாமியில் பாழடைந்து போன கட்டுமரங்கள் பல தங்களை ஆதரிக்க ஆளில்லாமல் அங்கேயே கிடந்தன. என்ன விசித்திரம்! மற்றவர்கள் பார்வையில் படாதவாறு பல காதல் ஜோடிகளை மறைத்து, அடைக்கலம் கொடுத்து ஆதரவாக இருக்கும் அந்த கட்டுமரங்களுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லையே! சரி போகட்டும்... வாழ்க்கைச் சக்கரம் அப்படித் தான் சுழலும் போலும்.

அந்த கட்டுமரங்களுள் ஒன்றன் மீதமர்ந்து பையில் இருந்த "டிஷூ பேப்பர்" பாக்கெட்டைத் திறந்தான் ரகு. அந்தப் பை சற்று வித்தியாசமாக இருந்தது. அதைப் பார்த்தாலே தெரிந்துவிடும் அது பெண்கள் பயன்படுத்தும் "ஹேன்ட் பேக்" என்று. டிஷூ பேப்பரை எடுத்து தன்னிரண்டு மகள்களின் கால்களிலிருந்தும் மணலைத் தட்டி விட்டான் ரகு. இந்த மணலை உதறிவிடும் சடங்கு முடிந்த பிறகு, மகள்கள் இருவரும் தந்தையின் இரு தோள்களைப் பிடித்துக் கொண்டு தத்தம் காலணிகளைத் தாமே அணிந்து கொண்டனர். அஞ்சலிக்கு சற்று கூடுதல் நேரம் தேவைப் பட்டது. ரகுவின் உதவியையும் மறுத்து விட்டாள் அவள். 

"அப்பா! அம்மா எப்போ பா வவ்வாங்க?" இது அஞ்சலி.

இருவரின் கைகளையும் பிடித்து நடந்து கொண்டிருந்த ரகு, "இதோ வந்திடுவாங்க டா செல்லம். ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டாங்களாம். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க" என்று கூறினான். அதைக் கேட்ட அஞ்சலி "ஹைய்யா!" என்று கத்திக் கொண்டு தனக்கு மட்டுமே புரியக்கூடிய ஏதோ ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தாள்.

சற்று தூரத்தில் ஒரு பஜ்ஜி கடை தென்பட, ஸ்வப்னா அப்பாவின் கையை விட்டு அந்த கடையை நோக்கி ஓடினாள். அதைப் பார்த்து அவள் தங்கையும் அதையே செய்தாள். 

ரகு கடைக்கு அருகில் வந்து, "ஸ்வப்னா குட்டி, பஜ்ஜி வேணாம் டா. வேற ஏதாவது ஹெல்த்தியா சாப்பிடலாம் வா டா" என்றான்.

"இல்ல. எனக்கு பஜ்ஜி தான் வேணும்" என்று முரண்டுபிடித்தாள் மூத்தவள். அக்காவைப் பார்த்து அஞ்சலியும், "எனக்கும் 'பட்டி' தான் வேணும் பா!" என்றாள். அவளுக்கு இன்னும் "ஜ" என்ற ஓசை சொல்ல வரவில்லை. 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி கடை காரியும், "இது கூட எல்த்தி தான் நைனா! இந்த எண்ண பாக்கிட்ட இப்போ தான் தொறந்தேன்.  கொயந்திங்கோ வேற ஆச பட்டு கேக்குதுங்கல்ல. வாங்கி குடு நைனா!" என்று தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

ரகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, அங்கேயிருந்த பஜ்ஜி வகைகளை ஆராய்ந்தான். பிறகு "சரிக்கா, ரெண்டு உருளைக்கிழங்கு பஜ்ஜி, ஒரு வெங்காய பஜ்ஜி, ஒரு மொளகா பஜ்ஜி, அப்புறம் ஒரு பிளேட் காலிபிளவர் குடுத்துடுங்க" என்றான்.

அவன் கூறியவற்றைக் கூறிய வரிசையிலேயே எடுத்து வைத்தாள் அந்த "அக்கா". பஜ்ஜிகளனைத்திலிருந்தும் சூடு குறைவதற்காக ரகு அவற்றை இரண்டு துண்டுகளாக்கினான். ஸ்வப்னா ஒரு பஜ்ஜித் துண்டைக் கையிலெடுத்து "உப் உப்" என்று ஊதினாள். அதைப் பார்த்த அஞ்சலியும் அதையே செய்தாள். அந்த பஜ்ஜி துண்டுகளில் சூடு இன்னும் குறையாத நிலையில் அவளது சிறிய கைகளால் அச்சூட்டினைத் தாங்க முடியவில்லை. "ஸ்ஸ்.. அப்பா!" என்று கத்தினாள். 

ரகு உடனே அவள் கையைப் பிடித்து "ஒண்ணுமில்ல டா செல்லம். ஒண்ணுமில்ல" என்று கூறி அவள் கை மீது மெதுவாக ஊதினான். பிறகு அந்த கடையில் சிறிது நீர் வாங்கி அவள் உள்ளங்கை மீது ஊற்றினான். "சரியாகிடும் டா செல்லம். அப்பா ஊட்டி விடறேன் இரு" என்று கூறி தனது இளைய மகள் அழாதவாறு பார்த்துக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்து, காசையளித்து விட்டு, ரகு இருவரின் கைகளைப் பிடித்து மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். "அப்பா, கால் வலிக்குது பா". இது ஸ்வப்னா. 

ரகு அங்கேயே நின்று, இருவரையும் பார்த்தான். சில நொடிகள் கழித்து இருவரையும் தூக்கித் தன் தோள்களின் மீது அமர்த்திக் கொண்டான். பீச்சில் விளையாடும்பொழுது என்ன மகிழ்ச்சி கிடைத்ததோ, அதே மகிழ்ச்சி அச்சிறுமிகளுக்குக் கிடைத்தது. உலகையே வென்றது போல் சத்தம் போட்டு சிரித்தனர் இருவரும். அதைக் கேட்ட ரகுவும் புன்னகைத்தான், அக்காட்சியைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் புன்னகைத்தனர். 

இந்த குதூகலத்துக்கிடையே திடீரென்று அஞ்சலி "அப்பா, அம்மா எப்போ பா வவ்வாங்க?" என்று மறுபடியும் கேட்டாள். ரகுவின் முகத்திலிருந்த புன்னகை நொடிப்பொழுதில் மறைந்து போனது. 

சிறிது நேரம் யோசித்து "அம்மா வருவா டா செல்லம். அம்மா கண்டிப்பா வருவா" என்றான் ரகு.

மறுமணம் செய்து கொள்ளவேண்டுமென்று ரகு அப்பொழுது தான் உறுதியாக முடிவெடுத்தான்.

6 comments:

Green Notion!! said...

semma da:)move on:)

Anonymous said...

மிகவும் அருமையான சிறு கதை ... சென்னைக் கடற்கரையின் அழகு கண் முன் விரிகின்றது .. குழந்தைகளின் உலகையும் பெரியவர்களின் உலகையும் அழகாக இணைக்கும் விதம் சிறப்பு !!! மொழி நடையும் .. மழலை மொழியின் உபயோகமும் கச்சிதம் ... !

அம்மா வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு அவர் உயிருடன் இல்லை என்பதை இறுதியில் வைக்கும் போது ஒரு சிறு துயரம் படிப்பவருக்கு ஏற்படும் என்றே நினைக்கின்றேன். ஆனால் மறுமணம் புரிந்தால் உண்மையில் அம்மா கிடைப்பாரா என்பது சந்தேகமே !!!

Vinay Kumaar said...

@ஆரோணன்: உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

நீங்கள் கூறுவது உண்மை தான். மறுமணம் புரிந்தால் உண்மையில் அம்மா கிடைப்பாரா என்பது சந்தேகமே. ஆனாலும் கிடைப்பார் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கையை ஓட்டுகிறது. நம்பிக்கை தான் வாழ்க்கை அல்லவா? :)

aishwarya said...

very nice :)

Kumar said...
This comment has been removed by the author.
Kumar said...

கலக்கிட்ட வினய். மனம் நெகிழ வைத்த படைப்பு.

நல்லா வருவே!!